இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஏற்கெனவே கொரோனா கிருமி பாதிப்பின் இரண்டாவது அலையால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்தப் பாதிப்பு அடுத்தகட்ட மூன்றாவது அலையை உருவாக்கி விடுவதைத் தடுக்க மத்திய அரசும் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி நகர அரசும் கடுமையாகப் போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டெல்லியில் தொற்று பாதிப்பின் மூன்றாவது அலை தற்போதே பரவி வருவதாக வும் தகவல்கள் பகிரப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாடெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் 46,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒன்பது நாள்களில் இது அதிகபட்ச பாதிப்பு.
இதுவரை இந்தியா முழுவதும் 90,50,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் நாடெங்கும் 560 பேர் உயிரிழந்ததாகவும் இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 132,726 பேராக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,546 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் 98 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமண விழாவில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும், கூட்டம் கூடு வதை தவிர்க்கவேண்டும் எனவும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான், அரியானா மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தக் கிருமி பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நாட்டிலேயே மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் பரவிய இரண்டாம் அலை மகாராஷ்டிராவிலும் பரவும் என்ற அச்சம் நிலவுவதால் டெல்லி-மும்பை இடையிலான 45 விமானங்கள், நூற்றுக்கணக்கான ரயில்களைக் குறைப்பது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

