ஆயுர்வேத மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் எலும்பு, பல் மருத்துவம் உள்ளிட்ட பொது அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தையும் அது குறித்த கல்வியையும் ஒழுங்குமுறைப்படுத்தும் இந்திய மருத்துவ மத்திய மையம் இம்முடிவை எடுத்துள்ளது. இதற்கு, இந்திய மருத்துவச் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பலதரப்பட்ட மருத்துவ முறைகளை ஒருங்கிணைக்க முற்படுவது பிற்போக்கான நடவடிக்கை எனச் சாடியுள்ள இந்திய மருத்துவச் சங்கம், எல்லா வகையிலும் அம்முடிவை எதிர்ப்போம் என அறிவித்துள்ளது.
அத்துடன், நவீன மருத்துவ அறுவை சிகிச்சை முறைகளைக் கைவிட்டு, பழங்கால ஆயுர்வேத நூல்களில் இருந்து தனக்கென பிரத்தியேகமாக அறுவை சிகிச்சை முறைகளை உருவாக்கிக்கொள்ளுமாறும் அச்சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பது 'கிச்சடி' மருத்துவ முறையையும் கலப்பு மருத்துவர்களையும் உருவாக்கி விடும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் ராஜன் சர்மா முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆயுர்வேத மருத்துவமனைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவை சட்டப்படி செல்லுபடியாகும் எனத் தெளிவுபடுத்தவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ மத்திய மையத்தின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
முதுநிலை ஆயுர்வேத மருத்துவ மாணவர்களுக்கு அதிகாரபூர்வமாக அறுவை சிகிச்சைப் பயிற்சியை அறிமுகப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் குறித்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, பொது அறுவை சிகிச்சை குறித்தும் காது, மூக்கு, தொண்டை, கண், தலை, பல் நோய்களுக்கான அறுவை சிகிச்சை குறித்தும் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.
அத்துடன், தோல் மாற்று, கண்புரை அறுவை சிகிச்சை செய்யவும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அந்தச் சட்டத்திருத்தம் அனுமதி வழங்கும்.

