சுடச் சுடச் செய்திகள்

தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை: சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்

 

ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கி வரும் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அத்தடுப்பூசி தயாரிப்பில் அங்கம் வகிக்கும் இந்திய சீரம் நிலையத்தின் தலைமை நிர்வாகி அதார் பூனவாலா தெரிவித்துள்ளார்.

“ஏற்கெனவே 40 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. வரும் ஜனவரி மாதத்திற்குள் குறைந்தபட்சம் 100 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுவிடும்,” என்று திரு பூனவாலா கூறியுள்ளார்.

ஒரு தடுப்பூசி கிட்டத்தட்ட 250 ரூபாய் எனும் விலைக்கு சீரம் நிறுவனத்தினுடைய 90% தடுப்பூசிகள் இந்திய அரசாங்கத்திற்கு விற்கப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

எஞ்சிய பத்து விழுக்காடு தடுப்பூசிகள் அதிக விலைக்கு, அதாவது ஒரு தடுப்பூசி கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்குத் தனியார் சந்தையில் விற்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்களது தடுப்பூசியை 23,000 பேரிடம் பரிசோதித்துப் பார்த்ததில் அது சராசரியாக 70% செயல்திறன்மிக்கதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆக்ஸ்ஃபர்ட்-ஆஸ்ட்ரா செனகா நிறுவனங்கள் நேற்று தெரிவித்தன.

மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போல் அல்லாமல், ஆக்ஸ்ஃபர்ட் தடுப்பூசியை இயல்பான குளிர்பதன வெப்பநிலையில் எடுத்துச் செல்ல முடியும் எனக் கூறப்பட்டது.

எஞ்சிய ஒழுங்குமுறைத் தடைகளையும் கடந்துவிட்டால் 2021ஆம் ஆண்டில் மூன்று பில்லியன் தடுப்பூசிகள் வரை தயாரிக்கத் திட்டமிட்டு இருப்பதாக ஆஸ்ட்ராஸெனிக்கா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

முன்னதாக, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 250-300 மில்லியன் பேருக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக இந்திய சுகாதார அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு ஒரு கோடி முன்கள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக அரசாங்க வட்டாரங்களைச் சுட்டி, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon