4 மகள்களைக் கழுத்தறுத்து கொன்ற தாய் மருத்துவமனையில் கவலைக்கிடம்

4 மகள்களைக் கழுத்தறுத்து கொன்ற தாய் மருத்துவமனையில் கவலைக்கிடம்

2 mins read
27d321f0-77e4-4477-a09a-9d7e94865c50
குர்ஷித்தின் வீட்டுக்கு வெளியே கூடிய உறவினர்கள். படம்: இந்திய ஊடகம் -

பிறந்து 8 மாதமான குழந்தை முதல் 7 வயதுக்குட்பட்ட 4 சகோதரிகள் கழுத்து அறுபட்டு இறந்ததன் தொடர்பில் குழந்தைகளின் தாயார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் தந்தை அளித்த தகவலின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழந்தைகளின் தாயாரும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டதால் அங்குள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹரியானாவின் நஹ் மாவட்டத்தில் உள்ள பிப்ரோலி கிராமத்தில் நேற்று இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்த கிராமத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததையடுத்து, கிராமத்தார் அனைவரும் நேற்று துக்கம் நிகழ்ந்த வீட்டில் இருந்தனர்.

உயிரிழந்த குழந்தைகளின் தந்தையும் அங்குதான் சென்றிருந்தார்.

இன்று (நவம்பர் 27) அதிகாலை 3 மணியளவில் அவர் வீடு திரும்பியபோது, வீடு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது.

சந்தேகப்பட்ட அவர், உறவினர்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, குழந்தைகள் நால்வரும் கழுத்தறுபட்ட நிலையில் கட்டில்களில் காணப்பட்டனர்.

ஏழு வயது முஸ்கன், 5 வயது மிஸ்கினா, 3 வயது அல்சிஃபா உடன் இன்னும் பெயரிடப்படாத 8 மாதக் குழந்தையும் அந்த நால்வருள் அடக்கம்.

குழந்தைகளின் தாயான 35 வயது ஃபர்மினா, தன் கழுத்தை அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரிடமிருந்த சமையலறைக் கத்தியைப் பிடுங்கி எறிந்த ஃபர்மினாவின் கணவர் குர்ஷித் அகமது, அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், குழந்தைகள் நால்வரும் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. தாயாரின் வாக்குமூலத்தைப் பெற போலிசார் காத்திருப்பதாகக் கூறப்பட்டது.

ஃபர்மினா - குர்ஷித் தம்பதியருக்கு 2012ஆம் ஆண்டில் திருமணமானது எனவும் நான்கு குழந்தைகளுடன் தம்பதி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அவ்வப்போது மனதளவில் பாதிக்கப்பட்டவர்போல இருந்த ஃபர்மினா, ஏற்கெனவே திருமணமாகி கணவரிடமிருந்து பிரிந்தவர் என்றும் முதல் கணவர் மூலம் அவருக்கு ஒரு மகள் பிறந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்