மும்பையின் தாராவி பகுதியில் மின்தூக்கியில் சிக்கி 4 வயது சிறுவன் மரணம்

2 mins read
b97e5b4e-9440-4bcf-bf55-ed8c1155d0fb
கதவுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுவன், மின்தூக்கிக்கும் மாடி சுவருக்கும் இடையே நசுக்கப்பட்டார். படம்: இந்திய ஊடகம் -

மும்பை, தாராவி பகுதியில் மின்தூக்கியில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாராவியில் உள்ள ஏழு மாடிக் கட்டடம் ஒன்றில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இவரது 4 வயது மகன் முகமது ஹூசைபா சேக், எப்போதும் துருதுருவென விளையாடிக்கொண்டு இருப்பார்.

இச்சிறுவன், நேற்று பிற்பகல் விளையாடுவதற்காக அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்திற்கு தமது அக்கா மற்றும் அண்டைவீட்டு சிறுவனுடன் வந்தார். இவர் விளையாடி முடித்துவிட்டு மின்தூக்கியில் நான்காவது மாடிக்குச் சென்றார்.

நான்காவது மாடி வந்தவுடன் இச்சிறுவனின் அக்கா மற்றும் அண்டைவீட்டு சிறுவன் மின்தூக்கியைவிட்டு வெளியேறிவிட்டனர். ஆனால், சிறுவன் சேக் மட்டும் மின்தூக்கியின் உள்புறம், வெளிப்புற கதவுகளுக்கு இடையே நின்றுகொண்டு இருந்தார். இதில் சிறுவன் மின்தூக்கிக் கதவைப் பூட்டிவிட்டு வெளியே செல்வதற்கு முன், வெளிப்புற கதவும் பூட்டிக்கொண்டது. இதனால் மின்தூக்கியின் இரு கதவுகளுக்கும் இடையே இச்சிறுவன் மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில், கதவுகள் மூடப்பட்டதால் மின்தூக்கி மேல் நோக்கி செல்லத் தொடங்கியது. இதனால் கதவுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுவன், மின்தூக்கிக்கும் மாடி சுவருக்கும் இடையே நசுக்கப்பட்டார். பின்னர் அவர் மின்தூக்கி, சுவர் இடைவெளி வழியாக கீழே விழுந்தார்.

நெஞ்சை பதறவைக்கும் இந்தச் சம்பவத்தின் காட்சிகள் மின்தூக்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதற்கிடையே வெளியே நின்ற சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் ஓடிவந்தனர். ஆனால் மின்தூக்கியில் சிக்கிய சிறுவனை அவர்களால் மீட்க முடியவில்லை.

இந்த நிலையில் தகவலறிந்து தீயணைப்புப் படையினரும் போலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி சிறுவனைச் சடலமாக மீட்டனர்.

இதையடுத்து போலிசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் மின்தூக்கியில் சிக்கி பலியான சம்பவம் தாராவி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்