கிரிக்கெட் சூதாட்டத்தால் பெரும் கடனாளியான பொறியியல் மாணவர்; கடனை அடைக்க தாய், தங்கை கொலை

2 mins read
c7735bf4-ce02-47f5-9513-1d4cc75ca90d
சாய்நாத். படம்: இந்திய ஊடகம் -

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட கடனை அடைக்க தம் தாய், தங்கையைக் கொலை செய்த பொறியியல் கல்லூரி மாணவரை ஹைதராபாத் போலிசார் கைது செய்தனர்.

ஹைதராபாத் மெட்ச்சல் பகுதியை சேர்ந்தவர் சாய்நாத், 23.

பொறியியல் கல்லூரியில் எம்.டெக். படித்துக்கொண்டே வாகன விற்பனைக் கடை ஒன்றில் பணியாற்றிவந்தார் சாய்நாத். அவரது தந்தை பிரபாகர் ரெட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தந்தையின் சேமிப்பு, காப்பீட்டுத் தொகையாக ரூ.20 லட்சம் என கணிசமான தொகை தாயார் சுனிதாவின் கணக்குக்கு மாற்றப்பட்டது.

சாய்நாத் அண்மைக் காலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.20 லட்சத்தை சாய்நாத் இழந்ததுடன், லட்சக்கணக்கில் கடன்வாங்கி சூதாட்டத்தில் செலவழித்தார்.

கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்பக்கேட்டு நெருக்கடி கொடுத்ததால், வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்தர் சாய்நாத். ஆனால், அதற்கு தாயும் தங்கையும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிந்து, அவர்களைக் கொல்ல முடிவு செய்தார்.

கடந்த மாதம் 23ஆம் தேதி காலை, வீட்டில் சமைத்த உணவில் பூச்சி மருந்தைக் கலந்துவிட்டு, வேலைக்குச் சென்றுவிட்டார் சாய்நாத். அந்த உணவைச் சாப்பிட்ட அம்மா சுனிதாவும் தங்கை அனுஷாவும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மாலையில் வீடு திரும்பிய சாய்நாத், இருவரையும் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி தங்கை அனுஷாவும், 28ஆம் தேதி தாயார் சுனிதாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சாய்நாத்தின் நடத்தையில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலிசில் புகார் கொடுத்தனர்.

விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட சாய்நாத்தை போலிசார் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்