புரெவி புயல்: மிக கனமழைக்கு வாய்ப்பு; வெள்ளக்காடாக மாறிய சென்னை

புரெவி புயல்: மிக கனமழைக்கு வாய்ப்பு; வெள்ளக்காடாக மாறிய சென்னை

2 mins read
23c58bd9-35de-4c87-a182-bf02b9a0407f
படம்: இந்திய ஊடகம் -

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என்கிறது அறிக்கை.

ஆக அதிகமாக கொள்ளிடத்தில் 36 செ.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில் சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை பொழிந்துள்ளது.

புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பொழிகிறது.

சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி.நகர், கிண்டி, திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்ததால் மிக கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தமிழகத்தின் கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற தென்மாவட்டங்கள் மட்டுமின்றி திருவனந்தபுரம் உட்பட கேரளாவின் சில பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது.

இதனால் திருவனந்தபுரம் விமான நிலையம் 8 மணி நேரத்துக்கு செயல்பாட்டை நிறுத்தி வைத்தது.

குறிப்புச் சொற்கள்