மத்திய அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையேயான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து இருதரப்பும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
இதற்கிடையே வேளாண் சட்டங்களில் 8 திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆனால், விவசாயிகள் இந்நடவடிக்கையையும் ஏற்க மறுத்து விட்டனர்.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மூன்று சட்டங்களையும் அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி விவசாய அமைப்புகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் டெல்லியில் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 40 விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு கடந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிமைகளில் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், இருமுறையும் சுமூகமான தீர்வு காணப்படவில்லை. நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தை எட்டு மணி நேரம் நீண்டது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்தர் சிங் தோமர், விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதத்துடன் நடந்துகொள்ளவில்லை என்றார்.
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் எழுப்பியுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் திறந்த மனதுடன் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதற்கிடையே அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசின் சார்பில் மத்திய உணவு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த உணவைப் பெற்றுக்கொள்ள அப்பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர்.
தங்களுக்கு உணவளித்து உபசரிப்பதற்குப் பதிலாக தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
டெல்லியில் நிலவும் கடும் குளிரை மனதிற்கொண்டு விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
"இவ்விஷயத்தில் யார் பெரியவர், யார் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. மூன்று வேளாண் சட்டங்களிலும் விவசாயிகள் முன்வைக்கும் திருத்தங்களைப் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது," என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை நிலை தமக்குப் பெரும் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

