கின்னஸ் சாதனை படைத்த 8 அடுக்கு 'வைரப் பூ'; இந்திய இளையரின் வடிவமைப்பு

கின்னஸ் சாதனை படைத்த 8 அடுக்கு 'வைரப் பூ'; இந்திய இளையரின் வடிவமைப்பு

1 mins read
857161fd-33ad-428c-9e4a-b86eae6e05b4
படம்: ஏஎஃப்பி -

இதழ்கள் விரிந்த கண்ணைப் பறிக்கும் விண்மீன் மலரைப் போன்ற தோற்றமுள்ள அழகிய மோதிரம் ஒன்றில் 12,638 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இந்த விலைமதிப்பில்லாத மோதிரத்தை விற்கும் எண்ணம் இல்லை என்கிறார் அதனை உருவாக்கிய இந்திய நகை வடிவமைப்பாளர்.

'தி மேரிகோல்ட் - தி ரிங் ஆஃப் பிராஸ்பரிட்டி' என அழைக்கப்படும் இந்த வட்ட வடிவ மோதிரம் 165 கிராமை விட சற்று எடை கூடுதலானது.

"இது அணியக்கூடியது, வசதியாக இருக்கும்," என்று கூறிய 25 வயது ஹர்ஷித் பன்சால், இந்த மோதிரத்தை உருவாக்குவது தனது கனவுத் திட்டம் என்றார்.

இந்தியாவின் வைர முனையமான சூரத்தில் நகை வடிவமைப்புத் துறையில் படித்துக்கொண்டிருந்தபோது, ஈராண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் உருவாகியது என்றார் பன்சால்.

"10,000 வைரங்களுக்கு மேல் பதிப்பது என் திட்டம். எனது பல வடிவமைப்புகளை நானே நிராகரித்தேன். இறுதியில் இந்த வடிவமைப்பை உருவாக்கினேன்," என்று பன்சால் குறிப்பிட்டார்.

இந்த வைரப் பூவில் எட்டு அடுக்கு இதழ்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இதழின் வடிவமைப்பும் வித்தியாசமானது.

இந்த மோதிரத்தை வாங்க பலர் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறிய பன்சால், "இது விலை மதிப்பற்றது. இது பெருமைக்குரிய விஷயம்," என்றார்.

இதற்கு முன்பு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த வைர மோதிரமும் இந்தியாவில் செய்யப்பட்டதுதான். அதில் மொத்தம் 7,801 வைரங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்