ஆந்திராவின் ஏலூரு நகரில் மர்ம நோய்; ஒருவர் மரணம், மருத்துவமனையில் 300 பேர்

2 mins read
b9d6b257-34c5-4460-88eb-7ddf9b97a8fd
மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாது, ஏலூரு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை 45 பேரிடம் இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 46 சிறுவர்களும் 70 பெண்களும் அடங்குவர் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நேற்று காலை நிலவரப்படி, கிட்டத்தட்ட 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கண்டுபிடிக்கப்படாத நோயின் காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நோய் ஏற்பட குடிநீர் அல்லது உணவு மாசு காரணம் அல்ல என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேசிய வேதியியல் தொழில்நுட்ப மையத்தின் குழு ஒன்றும் இன்று ஏலூரு சென்று ஆய்வுகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டூர் மாவட்டம், மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஏழுவர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றும் ஏலூரு வந்துள்ளதாகவும் நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு குமட்டல், வலிப்பு, நினைவிழப்பு போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏலூரு அரசு மருத்துவமனையில் படுக்கைகளை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.

இந்தியா கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் ஆந்திராவில் பலரிடம் மர்ம நோய் ஏற்பட்டிருப்பது ஏலூரு பகுதி மக்களைப் பதற வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்