இந்தியா அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சுமார் 300 மில்லியன் பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய, நான்கு தடுப்பூசி மருந்துகளைக் குறிவைத்துள்ளது.
இதன்படி ஆக்ஸ்ஃபோர்டு-எஸ்ட்ரஸெனிகாவின் 'கோவிஷீல்டு', பரத் பயோடெக்கின் 'கோவெக்சின்' ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகள் அடுத்த ஜனவரிக்குள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் இறுதிக்குள் அமெரிக்காவின் ஃபைசர் மருந்தும் ரஷ்யாவின் 'ஸ்பட்னிக் வி'யும் கிட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்தது நால்வகை தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் கிடைக்கும் நிலையில், மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் தடுப்பூசி போடப்படும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கெனவே ஃபைசர் நிறுவனம், அதன் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை அவசரகால மருந்தாக பயன்படுத்த பிரிட்டன், பஹ்ரேன் உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து அனுமதி பெற்றுவிட்டது.
இதையடுத்து, தன் தடுப்பூசி மருந்தை இந்தியாவிலும் அவசரகால மருந்தாகப் பயன்படுத்த அனுமதிக்கும்படி புதுடெல்லிக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஸ்வீடனின் எஸ்ட்ரஸெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
இந்தத் தடுப்பூசி 90 விழுக்காடு செயல்திறன் கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமத்தை புனேவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' பெற்று, கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது.
இந்தியாவில் அவசரமாகத் தேவைப்படும் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் சீரம், கோவிஷீல்டு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையைப் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபைசர், மொடர்னா மருந்துகளைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக இந்தியாவிலேயே உருவாக்கப்படும் மருந்தையே பயன்படுத்தலாம் என்று தாங்கள் நம்புவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை, 9.67 மில்லியனைத் தாண்டிவிட்டது.

