இந்தியாவில் 'பாரத் பந்த்'க்கு அழைப்பு விடுத்த விவசாயிகள்; 24 கட்சிகள் ஆதரவு, 11 மாநிலங்களில் முழு அடைப்பு

இந்தியாவில் 'பாரத் பந்த்'க்கு அழைப்பு விடுத்த விவசாயிகள்; 24 கட்சிகள் ஆதரவு, 11 மாநிலங்களில் முழு அடைப்பு

2 mins read
76d9ebd2-63b1-4d9b-9797-b39578ed8d2b
டெல்லி - உத்தரப் பிரதேச நெடுஞ்சாலையில் 'பாரத் பந்த்' காரணமாக போக்குவரத்து இல்லை. சாலையோரத்தில் கொடியுடன் அமர்ந்து பேசும் விவசாயி. படம்: ராய்ட்டர்ஸ் -

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இன்று (டிசம்பர் 8) 'பாரத் பந்த்' என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பகுஜன் சமாஜ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி, ஜார்க்கண்ட் முக்தி மோட்சா, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட 24 கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

மேலும் ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, எச்எம்எஸ் உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து உள்ளன.

மேலும் வங்கி ஊழியர்கள், அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய ரயில்வே பணியாளர்கள் தேசிய கூட்டமைப்பு ஆகிய 2 ரயில்வே சங்கங்கள், மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர்கள், பெண்கள் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இன்று நடத்தும் 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

பெரும்பாலான மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

அதன்படி டெல்லி புறநகர்களில் குவிந்துள்ள விவசாயிகள் இன்று காலை முதலே முக்கிய சாலைகளில் குவிந்தனர். 10 மணி அளவில் டெல்லிக்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

13வது நாளாக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் அரசாங்கம் நாளை 6வது முறையாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்