கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும் உலகின் ஆக வேகமாக வளர்ந்துவரும் பொருளியல்களாக உள்ளன. வறுமை ஒழிப்பைப் பொறுத்தவரை இவற்றின் சாதனைகள் பிரம்மாண்டமானவை. இவ்விரு நாடுகள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேரை வறுமையின் கோரப் பிடியிலிருந்து விடுவித்துள்ளன. இதில் 750,000 பேரின் மேன்மைக்கு சீனா காரணமாக உள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விரண்டு நாடுகள் ஒன்றோடு ஒன்றுடன் ஒப்பிடும் நிலைமையில் இருந்தன. ஆனால் இன்றைய நிலையோ வேறு. பொருளியல் மற்றும் சமூகவியல் குறியீட்டிலும் சீனா இந்தியாவைவிட சிறப்பான நிலையில் உள்ளது. சீனாவின் உள்நாட்டுக் கட்டமைப்பு இந்தியாவைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. அத்துடன் சமுதாய நலக் குறியீடுகளில் அந்நாடு இந்தியாவைக் காட்டிலும் மிகவும் முன்னேறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியுள்ள உலக நாடுகளுக்கான மனித மேம்பாட்டுக் குறியீடு அளவைக் காட்டும் (எச்டிஐ) 2019 பட்டியலில் சீனா, 189 நாடுகளில் 85ஆம் நிலையில் உள்ளது. அதே பட்டியலில் இந்தியா 129ஆம் நிலையில் உள்ளது.
இந்தியாவுடன் ஒப்புநோக்க சீனாவின் பொருளியல் மிகவும் சிறப்பாக இருப்பது எதனால்? 1978ஆம் ஆண்டிலேயே திறந்த சந்தையை அமைக்கும் நோக்கில் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்கள் அதன் தற்போதைய முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கை வித்திட்டது. இந்தியாவோ இந்தப் பொருளியல் சீர்திருத்தங்களை 1991ஆம் ஆண்டில் தொடங்கியது, அதுவும் பொருளியல் நெருக்கடி ஏற்பட்ட பிறகு.
சீனப் பொருளியலின் மதிப்பு தற்போது S$18.8 ட்ரில்லியன். இது இந்தியப் பொருளியல் மதிப்பைக் காட்டிலும் ஐந்து மடங்காக உள்ளது. உலகத்திலேயே இரண்டாவது ஆகப் பெரிய பொருளியல் சீனாவின் பொருளியலே. உலகத்திலேயே ஆகப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு சீனாதான். உலக ஏற்றுமதிகளிலேயே 12.8 விழுக்காடு சீனாவைச் சேர்ந்தது. 1.7 விழுக்காடு இந்தியாவைச் சேர்ந்தது.
சீனாவின் சீர்த்திருத்தங்களின் இயல்பும் மாறுபட்டவை. விவசாயத் துறையில் தொடங்கிய சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்குக் கட்டுப்பாட்டுகளையும் சிறந்த விலைகளையும் கொடுத்தன. இது, பெரும்பாலான சீன மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. அதே நேரத்தில் சீனா, உற்பத்தித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தியது. குறைந்த கூலியில் நிறைய பொருட்களைத் தயாரித்து உலகச் சந்தையில் போட்டியிட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொடுத்த மூலதனம், புதிதாக உருவாக்கப்பட்ட பொருளியல் வட்டாரங்களுக்காக செலவிடப்பட்டது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அதிகப் பேர் குடிபெயரத் தொடங்கினர். சீனா மிக விரைவில் நகரமயமானது.
சீனாவின் நகரமயமாதல் விகிதம் 1978ஆம் ஆண்டில் 18 விழுக்காட்டிலிருந்து 2018ல் 59 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது. 2001ஆம் ஆண்டில் உலக வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த சீனாவின் உற்பத்தித் துறை மேலும் வளர்ச்சி கண்டது.
இந்தியாவின் 1991 சீர்திருத்தங்கள், பல்வேறு அரசாங்கத் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிநாட்டு இறக்குமதிகளையும் முதலீடுகளையும் வரவேற்றன. இதனால் அந்நிய முதலீடு கூடினாலும் இச்சீர்த்திருத்தங்கள் மக்களில் பெரும்பாலானோர் பணியாற்றும் விவசாயத் துறையைச் சென்று சேரவில்லை. எனவே சீனாவில் ஏற்பட்ட பெருமளவிலான வேலை உருவாக்கம் இந்தியாவில் ஏற்படவில்லை.
இந்தியாவின் பொருளியல் தற்போது சேவைத்துறை ஆகப்பெரும் துறையாக உள்ளது. ஆனால் அந்நாட்டின் உற்பத்தித் துறை சேவைத்துறைக்கென்றே ஒதுக்கப்பட்டிருப்பதால் உற்பத்தித் துறையின் பெருக்கம் பாதிப்படைந்துள்ளது.
உற்பத்தித்துறையின் விரிவாக்கத்திற்கு இந்தியாவில் முட்டுக்கட்டையாக கெடுபிடியான ஊழியர் சட்டங்கள், நில ஆக்கிரமிப்பு தொடர்பிலான பிரச்சினைகளைக் கையாள இந்தியா தவறவிட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள் இன்றும் நிலவுகின்றன. இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவிலான உற்பத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்யாததற்கு இவையே காரணம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய "மேக் இன் இந்தியா" திட்டம் உற்பத்தித் துறையின் வளர்ச்சியை அதிகரிக்க முயன்றபோதும் முன்னைய அரசாங்கங்கள் வாய்ப்பைத் தவற விட்டதால் சீனாவைப் போல இந்தியா தளவாட இணைப்புகளை வளர்த்துக்கொள்ள முடியவில்லை.
1990களில் நல்ல முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருந்த இந்தியா, தனது சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செய்யவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில்தான் இந்தியா பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்த முற்படுகிறது. அங்க அடையாளங்களுடன் தொடர்புடைய தேசிய அடையாள அமைப்பு, தேசிய பொருள் சேவை வரி மற்றும் நொடித்துப்போகுதல் தொடர்பான வரைமுறைகள் போன்றவற்றின் அறிமுகம் பொருளியல் வளர்ச்சியை ஆதரிக்கும் என்றாலும் அவை தாமதமாகவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்.