ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடத் தயாராக இருப்பதாக இந்தியாவின் ஆகப் பெரிய மருத்துவமனை குழுமமான அப்போலா மருத்துவமனைகள் என்டர்பிரைஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் எத்தனை தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்பது குறித்தும் தடுப்பூசி போடுவதில் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்தும் இந்திய அரசாங்கம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று அது கூறியது. தனக்குச் சொந்தமான 71 மருத்துவமனைகள், நூற்றுக்கணக்கான மருந்தகங்கள், ஆயிரக்கணக்கான மருந்துக்கடைகள் ஆகியவற்றில் உள்ள 6,000 ஊழியர்களுக்குத் தடுப்பூசி போட பயிற்சி அளித்துவிட்டதாக அப்போலோவின் நிர்வாக இயக்கு நர் சுனிதா ரெட்டி கூறினார்.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் தடுப்பூசி தொடர்பான விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"தடுப்பூசி போடுவதை அரசாங்கம் முழுமையாக ஏற்று நடத்த விரும்புகிறதா அல்லது தனியார் துறைக்கு அதில் அனுமதி உள்ளதா என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம்.
"தடுப்பூசி பெறக்கூடியவர்களின் எண்ணிக்கையை எவ்வாறு இரட்டிப்பாக்குவது என்பதே முக்கியம். அனைத்து வகையிலும் உதவி செய்ய அப்போலோ தயாராக இருக்கிறது.
"தடுப்பூசி போடும் பணியை அரசாங்கத்தால் ஏற்று நடத்த முடியும். ஆனால் அதைச் செய்து முடிக்க நேரம் எடுக்கும்," என்று சென்னையிலிருந்து திருவாட்டி ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
தடுப்பூசி போடுவது தொடர்பில் பெரிய கட்டமைப்பு கொண்ட தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட இந்திய அரசாங்கம் முடிவெடுத்தால் குறுகிய காலகட்டத்தில் அதிகமானோருக்குத் தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தடுப்பூசி போடுவதை அடுத்த சில வாரங்களில் இந்தியா தொடங்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அடுத்த ஐந்திலிருந்து ஆறு மாதங்களில் இந்தியாவுக்குப் பெருமளவிலான தடுப்பூசி மருந்து அனுப்பிவைக்கப்படும் என்று பாரத் பாயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்தார்.
இன்னும் 60லிருந்து 120 நாட்களுக்குள் தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என்றும் தனது சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு அதுகுறித்து முதலில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அதன் மின்னிலக்கச் செயலி மூலம் அப்போலா மருத்துவமனைகள் என்டர்பிரைஸ் தெரிவித்து வருகிறது.
கொவிட்-19 தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ள இந்திய சீரம் கழகத்துடன் அப்போலா மருத்துவமனைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசின் வழிகாட்டுதலுக்குக் காத்திருப்பதாக திருவாட்டி ரெட்டி கூறினார்.

