வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 15 நாள்களாக நீடித்து வரும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் டெல்லி நோக்கி செல்வதாகவும் இதனால் போராட்டக்களம் தீவிரமடைந்து வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துள்ள விவசாய அமைப்புகள் திங்கட்கிழமையன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளன.
விவசாயிகளுடனான ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தையை புதன்கிழமையன்று மத்திய அரசு திடீரெனக் கைவிட்டது. இதனால் விவசாயிகள் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் கொண்டுள்ள ஆட்சேபணைகளை திறந்த மனதுடன் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியது. அச்சட்டங்களில் மாற்றங்களைச் செய்ய முன்வந்ததுடன் வரைவு முன்மொழிவையும் வெளியிட்டது.
ஆனால் விவசாயிகள் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை முதல் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் நாடு தழுவிய அளவில் இதற்கு ஆதரவு கோரப்படும் என்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பின்னால் சீனா, மற்றும் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ரோசாஹேப் தான்வே கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவை தொடர்பாக இஸ்லாமியர்கள் எப்படி தவறாக வழிநடத்தப்பட்டனரோ அதேபோல் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று வதந்தி பரப்பப்படுகிறது என அவர் சாடியுள்ளார்.

