கௌரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அரசு விடுத்த அழைப்பு நிராகரிப்பு
புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 17வது நாளாக நீடித்தது.
இந்த நிலையில், மேலும் ஏராளமான வாகனங்களில் விவசாயிகள் புதுடெல்லி எல்லையை நோக்கி பஞ்சாப்பில் இருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
புதுடெல்லிக்கு வரும் முக்கியமான ரயில்களை நிறுத்தி போராடப் போவதாகவும் விவசாயிகள் கடுமை யாக எச்சரித்து இருக்கிறார்கள்.
சுமார் 40 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குழுமி உள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக புதுடெல்லியில் இருந்து பல மாநிலங்களுக்குச் செல்லும் சாலைகள் அடைபட்டுவிட்டதால் போக்குவரத்து நெரிசலால் புதுடெல்லி திணறுகிறது.
அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை.
இந்த நிலையில், கௌரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் அதற்கு விவசாயிகளிடம் இருந்து பதில் இல்லை என நேற்று பிற்பக லில் இந்திய அரசு தெரிவித்தது.
அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் முன்வந்தது. ஆனால் அந்தத் திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவையில்லை என்று நேற்று விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
"பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவான மூன்று சட்டங்களையும் மத்திய அரசாங்கம் திரும்பப் பெறவேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 12 ஆம் தேதி (இன்று) டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை ஆக்கிரமிக்கப்படும்," என்று அவர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
புதுடெல்லியை முற்றுகையிடும் நோக்கத்துடன் நவம்பர் 26ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட் டம் நடந்து வருகிறது.

