இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட சுமார் 10 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்ததுடன், அதன் தொடர்பில் 5 பேரை கைது செய்தனர்.
கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் மண்டபம் அடுத்த மன்னார் வளைகுடா மணாலி தீவுக்கு அருகே படகில் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
நேற்று அதிகாலை முதல் மண்டபம் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கடற்படை வீரர்கள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இணைந்து மணாலி தீவு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நாட்டுப் படகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும் மண்டபம் மரைக்காயர் பட்டினத்தை சேர்ந்த பையஸ் அகமத், முகமது பாரூக் ஆகியோர் என தெரிந்தது.
அவர்களை பிடிக்க முற்பட்ட போது அருகில் மற்றோரு படகில் இருந்த முகமது ரசாக், ஜாஸ் அகமத், ஜெயனுல் பயாஷா ஆகிய மூவரும் இவர்கள் தப்பிச் செல்ல உதவ முன்வந்ததாகக் கூறப்பட்டது.
கடலோரா காவல் படை நெருங்கி வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் தங்கத்தை கடலில் வீச முயற்சித்தபோது அவர்கள் ஐவரையும் கைது செய்த கடலோர காவல் படையினர் இரண்டு நாட்டுப்படகு மற்றும் 9 கிலோ 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 4.5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.


