கேரளாவில் நாயை வாகனத்தில் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற இளையரை போலிசார் கைது செய்துள்ளனர்.
எர்ணாகுளத்தில் நேற்று இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அதனைப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியதால் அந்தக் காணொளி அதிவேகத்தில் பரவி பலரை அதிர்ச்சியடைய வைத்தது. இது குறித்து பேசிய போலிசார், யூசோப் என்பவர் தமது நாயால் தெரு நாய்களின் தொந்தரவு அதிகரித்ததால் அதை ஒழித்துக்கட்ட விரும்பியதாகக் கூறினர்.
காணொளியைப் பதிவிட்ட அகில், காலை 11.00 மணியளவில் பாரவூரில் அந்தக் கொடூரத்தை நேரில் பார்த்தாகக் கூறினார்.
"பயங்கரம். நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி சாலையில் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டது கொடூரமாக இருந்தது," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
காரை மடக்கி கேள்வி கேட்டபோது, "நாய் செத்தால் உனக்கு என்ன," என்று யூசோப் கூறியதாக அகில் தெரிவித்தார்.
இதையடுத்து யூசோப் நாயை விடுவித்தார். பின்னர் ஓடிய நாய் கண்டுபிடிக்கப்பட்டு, கால்நடை மருத்துமனையில் சேர்க்கப்பட்டது.
இதற்கிடையே அகில் இதனை தயா எனும் விலங்கு நலப்பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவித்ததால் அந்த அமைப்பு போலிசிடம் புகார் அளித்தது.
இதையடுத்து யூசோப் கைது செய்யப்பட்டார். அவரது ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.


