புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்குதான் தடுப்பூசி போட வேண்டும் என்றும் தடுப்பூசி போடும் சமயத்தில் பதிவு செய்பவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடுவதற்கு அனுமதி இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கூடுமானவரை ஒரு மாவட்டத்துக்கு ஒரே உற்பத்தியாளரின் தடுப்பூசியைத்தான் வழங்க வேண்டும் என்றும் வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் ஓர் அமர்வுக்கு அதிகபட்சம் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும்.
"தடுப்பூசி போட்டவுடன் அதைப் போட்டுக் கொண்டவருக்கு அடுத்த 30 நிமிடங்களுக்குள் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்," என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி எடுத்துச் செல்லும் கேரியர், குப்பிகள் மற்றும் ஐஸ்கட்டிகள் ஆகியவை நேரடியாக சூரிய ஒளியில் படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் தடுப்பூசி மையத்துக்கு பயனாளி வந்து சேரும் வரை தடுப்பூசி மற்றும் நீர்மங்களை வெளியே எடுக்கக்கூடாது என்றும் மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.
50 வயதுக்கு மேற்பட்ட பயனாளர்களை அடையாளம் காண அண்மைய நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

