எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் அண்மையில் சாதித்ததை நினைத்து எதிர்கால சமுதாயம் பெருமைப்படும் என மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் துணிச்சலுடன் போரிட்டு சீனப் படைகளைப் பின்வாங்கச் செய்ததாக குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாட்டுக்கும் சில சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு முறியடித்து வெற்றி பெறும் சூழ்நிலை வரும் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவுக்கும் அத்தகைய சூழ்நிலை லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்டது என்றார்.
கொரோனா காலகட்டத்திலும் இந்தியப் படைகள் எல்லைப் பகுதியில் மிகத் துணிச்சலுடன் செயல்பட்டு காவல் காத்து வருவதாகவும் எந்தக் கிருமியாலும் இந்தியப் படைகளைத் தடுக்க முடியாது என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், முன்பு இந்தியாவை யாரும் ஆதரிக்காததால் இந்தப் பிரச்சினையை எதிர்த்து அது தனித்துப் போரிட்டதாக சுட்டிக் காட்டினார். மேலும் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்ற உண்மையை உலக நாடுகள் ஏற்கும்படி இந்தியா செயல்பட்டது என்றும் அவர் கூறினார்.
"எல்லைக் கோட்டில் பிரச்சினை எழும்போதெல்லாம் சீன ராணுவத்தின் வலிமையுடன் இந்தியப் படைகளின் வலிமை ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாகக் குறிப்பிட நான் விரும்பவில்லை. எனினும் கலாசார வலிமையைப் பொறுத்தவரை சீனாவை விட இந்தியா ஒருபடி முன்னால் உள்ளது," என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
கிழக்கு ஆசியாவில் மியன்மார் தொடங்கி தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா வரை இந்திய கலாசாரத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே நாட்டின் வடக்கு எல்லையில் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

