கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், இந்தியாவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, விமானத்தில் 80% அளவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும் அனுமதி கொடுத்துள்ளது.
இதனையடுத்து, விமானப் பயணிகளை கவரும் வகையில் ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் 50% வரை கட்டணச் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
பயணம் மேற்கொள்ளும் நாளில் 60 வயது நிறைவடைந்தவராக இருத்தல் அவசியம். உள்நாட்டு விமானப் பயணத்துக்கு மட்டுமான இந்தச் சலுகை எகனாமிக் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பயணம் மேற்கொள்ளும் நாளில் இருந்து 3 நாட்களுக்கு முன்னதாக பயணச் சீட்டைப் பதிவு செய்யலாம். பயணத்தின்போது 60 வயது பூர்த்தியடைந்ததற்கான சான்றையும் உடன் கொண்டு செல்வது அவசியம்.
வரி உள்ளிட்ட இதர கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


