கேரளாவில் ஒரே நாளில் 6,185 பேருக்கு கிருமித்தொற்று; அதிகரிக்கும் பாதிப்பு

கேரளாவில் ஒரே நாளில் 6,185 பேருக்கு கிருமித்தொற்று; அதிகரிக்கும் பாதிப்பு

2 mins read
f357ac6b-2d86-4e4c-852a-8dc586542341
அகமதாபாத் நகரின் சாலைச் சந்திப்பில் முகக்கவசம் விநியோகித்த 'கிறிஸ்துமஸ் தாத்தா'. படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவில் அன்றாடம் பதிவாகும் புது நோயாளிகளின் பட்டியலில் கேரளா முதலிடத்திற்கு வந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 6,185 பேர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு குறைந்துவரும் நிலையில் நாட்டின் சில மாநிலங்களில் மட்டும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்புவரை கேரளாவில் கட்டுக்குள் இருந்த தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரித்திருப்பது அம்மாநில மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அன்றாட பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில், 2,293 புதிய பாதிப்புகளுடன் மேற்குவங்கம் இரண்டாம் இடத்திலும் 1,661 புதுச் சம்பவங்களுடன் சட்டீஸ்கர் மூன்றாமிடத்திலும் உள்ளன.

பாதிப்புகள் அதிகரித்தபோதிலும் கேரளாவில் எதிர்வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் 17ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

காலை மற்றும் மாலை என வகுப்புகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 50 விழுக்காடு மாணவர்கள் வீதம் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலையில் நாளை முதல் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகத் தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் இதுவரை 200க்கு மேற்பட்டோர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். எனினும் அதிகமான பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க உத்தரவிடக் கோரி ஐயப்ப சேவா சமாஜம் நீதிமன்றத்தை அணுகியிருந்தது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 24,010 பேருக்குப் புதிதாக கிருமி தொற்றியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9.95 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மொத்த பலி எண்ணிக்கை 144,451 ஆக உள்ளது என்றும் இதுவரை 9.94 மில்லியன் பேர் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் புதிதாக பாதிக்கப்படுபவர்களைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நிம்மதி தரும் தகவல்.

வியாழக்கிழமை நிலவரப்படி மருத்துவமனைகளில் 3,22,366 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்