வேளாண் சட்டங்கள் தொடர்பாக அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கங்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் அமைச்சின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தங்கள் குறைகள், கவலைகள், சந்தேகங்களைத் தெரிவித்தால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்த இயலும் என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான தேதியை விவசாயிகளே தீர்மானிக்கலாம் என தெரிவித்துள்ள மத்திய அரசு, விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளைப் பரந்த மனதுடன் பரிசீலிக்கவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே போராட்டம் நடைபெறும் இடங்களில் விவசாயிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். டெல்லியில் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளில் 11 பேர் கொண்ட குழு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மருத்துவர்களும், தாதியரும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
டெல்லியில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் வரும் 27ஆம் தேதி பொதுமக்கள் மணியோசை எழுப்பவேண்டும் என விவசாயச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடிய சுகாதாரப் பணியாளர்களை உற்சாகப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் மணியோசை எழுப்பவேண்டும் என்று பிரதமர் மோடி முன்பு கேட்டுக்கொண்டதைச் சுட்டிக்காட்டும் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள், அதேபோன்று விவசாயிகளுக்காக மக்கள் மணியோசை எழுப்பவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
25 நாட்களாக நீடித்துவரும் இந்தப் போராட்டத்தின்போது விபத்து, உடல்நலக் குறைவு, கடும் குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 33 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பஞ்சாப், ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்றன. நூற்றுக்கணக்கான கிராமங்களில் மனிதச்சங்கிலி அமைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதாக அகில இந்திய கிஷான் சங்கம் தெரிவித்துள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஹரியானா நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிடப் போவதாகவும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

