லண்டனில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்த 266 பயணிகளில் அறுவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை டெல்லி சென்று சேர்ந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் ஒருவர் உள்ளூர் விமானச் சேவை மூலம் சென்னைக்குச் சென்றவர்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களில் டெல்லி மற்றும் பிரிட்டனிலிருந்து வந்த அனைவரின் பெயர் பட்டியலும் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இம்மாதம் 31ஆம் தேதி வரை லண்டனுக்கான விமானச் சேவைகளை இந்தியா ரத்து செய்துள்ளது.
பிரிட்டனில் லண்டன் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் கொரோனா கிருமியின் புதிய வடிவம் வேகமாகப் பரவி வருவதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.
ஏற்கெனவே உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா கிருமியைவிட வேகமாக புதிய வகை கிருமி பரவும் எனக் கூறப்படுகிறது.

