புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அவர் தொலைபேசி மூலம் பேசினார்.
அப்போது விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார். தங்களுடைய போராட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றால் அது தங்களுக்கு வலிமை தரும் என விவசாயிகள் அவரிடம் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களில் செய்யப்படும் திருத்தங்களை ஏற்கப்போவதில்லை என விவசாயிகள் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு முன்பு விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் நேற்று முன்தினம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மத்திய அரசு எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என வலியுறுத்தினர். வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதாக மத்திய அரசு கூறுவது அர்த்தமற்றது என்று குறிப்பிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், அத்தகைய திருத்தங்களை ஏற்க இயலாது என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாகச் சுட்டிக்காட்டினர்.
பேச்சுவார்த்தை மூலம் நிச்சயம் தீர்வு காணமுடியும் என துணை அதிபர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் இன்று ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாட உள்ளார்.

