தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமண நாள் பரிசாக மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கிக் கொடுத்து அசத்திய கணவர்

2 mins read
ffb11398-7b6e-4dd7-a540-b62affa1e9fa
மனைவி சப்னாவுக்காக நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி பரிசளித்த தர்மேந்திரா அனிஜா. படம்: இந்திய ஊடகம் -

திருமண நாள் பரிசாக நிலாவில் 3 ஏக்கர் இடம் வாங்கி மனைவிக்குப் பரிசளித்துள்ளார் காதல் கணவர் ஒருவர்.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஜ்மர் நகரில் வசிக்கும் தர்மேந்திரா அனிஜா என்ற அந்த ஆடவர், தங்களது 8வது திருமண நாள் பரிசாக வித்தியாசமாக ஏதாவது வழங்க முடிவு செய்தார்.

பூமியில் இருக்கும் பொருள்களைத்தான் பெரும்பாலும் பரிசாக இதுவரை வழங்கியிருப்பார்கள்.

இதுவரை யாரும் வழங்கியிருக்காத பரிசை வழங்க விரும்பி நிலவில் இடம் வாங்க முடிவு செய்தார் தர்மேந்திரா.

நியூயார்க்கில் உள்ள லுனா சொசைட்டி இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்திடமிருந்து அவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்.

இந்த நடைமுறைக்கு ஓராண்டு பிடித்ததாகக் குறிப்பிட்ட தர்மேந்திரா, இத்தகைய சிறப்பு பரிசுக்கு உரியவர்தான் தம் மனைவி என்கிறார். நிலாவில் இடம் வாங்க எவ்வளவு பணம் செலுத்தினார் என்பது பற்றிய தகவல் இல்லை.

இம்மாதம் 24ஆம் தேதி திருமண நாளைக் கொண்டாட மாபெரும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார் தர்மேந்திரா. கிட்டத்தட்ட நிலாவில் இருப்பது போலவே அலங்காரம் போன்றவை இருந்ததாகக் குறிப்பிட்ட அந்த அதிர்ஷ்டக்கார மனைவி சப்னா, அந்த நிகழ்ச்சியில் நிலாவில் இடம் வாங்கியதற்கான பத்திரத்தை கணவர் வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

நிலவில் இடம் வாங்கி பரிசளித்தது முதல் முறையாக இருந்தாலும் இந்தியர்கள் நிலாவில் இடம் வாங்குவது புதிதல்ல.

சில மாதங்களுக்கு முன்பு புத்த கயாவைச் சேர்ந்த நீரஜ் குமார் என்பவர் நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை தமது பிறந்தநாளை முன்னிட்டு வாங்கினார். இந்தி நடிகர்கள் ஷாருக்கான், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரைப் பார்த்து நிலாவில் இடம் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்