64 வயதில் மருத்துவக் கல்லூரியில் மாணவராகி ஆச்சரியப்படுத்தும் ஆடவர்

1 mins read
e897b4ce-7708-4e25-9b1d-b12db7f90ba3
ஒடிசாவில் 64 வயதான ஜெய்கிஷோர் பிரதான் என்பவர், சாம்பல்பூர் மாவட்டம் புர்லா அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். படம்: இந்திய ஊடகம் -

ஒடிசாவில் 64 வயதான ஜெய்கிஷோர் பிரதான் என்பவர், சாம்பல்பூர் மாவட்டம் புர்லா அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.

பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான ஜெய்கிஷோருக்கு சிறு வயது முதலே மருத்துவப் படிப்பில் ஆர்வம் இருந்துள்ளது.

ஒருமுறை மட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய அவருக்கு அப்போது மருத்துவக் கல்வி பயில போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. வங்கிப் பணி கிடைத்தது, அதில் தொடர்ந்தார். ஆனால், அவரது மருத்துவராகும் கனவு மட்டும் தொடர்ந்து கனவாகவே இருந்தது.

கடந்த 2016ல் ஓய்வுபெற்ற அவர், கனவை நிஜமாக்க தீர்மானித்து, 2019ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத முடிவு செய்தார். நீட் தேர்வுக்கு வயது வரம்பில்லை என்ற தளர்வு இவருக்கு கை கொடுத்தது. நாள்தோறும் 10 முதல் 12 மணி நேரம் படித்தார்.

இப்போது மருத்துவக் கல்லூரி மாணவராகி இருக்கிறார்.

அதே கல்லூரியில் ஜெய்கிஷோரின் மகள் 2ம் ஆண்டு பல் மருத்துவக் கல்வி பயில்வது கூடுதல் தகவல்.