உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரின் ஆள் நடமாட்டம் மிகுந்த சாலை ஒன்றில் பட்டப் பகலில் இளையர் ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள், பாதசாரிகள் எனப் பலரது கண் முன்னே நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை தடுக்கவோ, அந்த இளையரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவோ யாரும் முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தை சிலர் புகைப்படங்கள், காணொளிகள் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினர்.,
அஜய் என்று அழைக்கப்படும் அந்த இளையரை கட்டையால் இருவர் கொடூரமாகத் தாக்கியதில் நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்துபோனார் இளையர்.
சம்பவத்தில் உயிரிழந்த அஜய்யின் சகோதரர் சஞ்சய்க்கும் அஜய்யை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் கோவிந்த் எனும் நபருக்கும் இடையே பழக்கடை வைப்பதன் தொடர்பில் தகராறு இருந்ததாகவும் அதன் தொடர்பில் சஞ்சய் சில நாட்களுக்கு முன்பு போலிசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை அடுத்து, இரு தரப்பினரையும் போலிசார் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
கடத்த திங்கட்கிழமை கோவிந்தும் அவரது நண்பர் அமித்தும் சேர்ந்து அஜய்யை கொடூரமாக அடித்ததை காணொளியில் காண முடிந்தது.


