உலகத்தில் ஆளரவமற்ற சில பகுதிகளில் மர்ம உலோகத் தூண்கள் காணப்படுவதும் பின்னர் அவை மறைவதும் அண்மைக் காலங்களில் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் உட்டாவில் உள்ள பாலைவனத்தில் முதலில் இத்தகைய தூண் காணப்பட்டது. பின்னர் அதைக் காணவில்லை. அதேபோல தூண்கள் சுமார் 30 நாடுகளில் காணப்பட்டன.
இது ஏலியன்களின் வேலையாக இருக்கலாம் என வலைத்தளவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், இதே மாதிரியான மர்ம உலோகத்தூண் ஒன்று இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பனி வனப்பூங்காவில் சுமார் 7 அடி உயர இரும்பு முப்பட்டகத் தூண் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சிம்பனி நிறுவனம், அகமதாபாத் நகரமன்றம் ஆகியவை இணைந்து அந்தப் பூங்காவை நிர்வகிக்கின்றன.
இந்த முப்பட்டகத் தூண் கடந்த மதம் 29ஆம் தேதி சிம்பனி நிறுவனத்தால் நிறுவப்பட்டதாகவும் பார்வையாளர்கள் அதில் தம்முடைய பிரதிபிம்பத்தைக் கண்டு தம்படம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தூண்கள் பற்றிய செய்தி பரபரப்பாக இருப்பதால், அதனைக் காக்கும் பொருட்டு, தூண் நிறுவியதைப் பற்றி சிம்பனி நிறுவனம் அறிவிப்பு எதுவும் விடுக்கவில்லை.
இத்தகைய தூண்கள் தோன்றி சில நாட்களுக்குப் பிறகு மறைந்து போவதால், கூடிய விரைவில் என் நண்பர்களுடன் அங்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என இளைஞர் ஒருவர் என்டிடிவி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.