இந்தியா: பிரிட்டன் மருந்துக்கு அங்கீகாரம்; தடுப்பூசி மும்முரம்

இந்தியா: பிரிட்டன் மருந்துக்கு அங்கீகாரம்; தடுப்பூசி மும்முரம்

1 mins read
63710e58-31a7-4992-a009-42d6030e3e21
-

பிரிட்டனுக்கு அடுத்து இந்தியாவும் ஆஸ்ட்ரஸெனிகா, ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை உருவாக்கியுள்ள கொவிட்-19 தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூரில் 'சீரம்' நிறு வனம் (எஸ்ஐஐ) உற்பத்தி செய்யும் 'கொவிஷீல்டு' என்ற இந்த தடுப்பூசி மருந்துக்கு நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இந்தியாவில் மட்டுமே நான்கு கொவிட்-19 தடுப்பூசிகள் தயாராக உள்ளது என்றார் அவர். எனினும், இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு இதனை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

கொரோனா கிருமி பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா தனது 1.3 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை மும்முரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று உறுதியளித்தார்.

இந்தியாவில் தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கியது. டெல்லியில் இந்த ஒத்திகையை நேற்றுப் பார்வையிட்ட ஹர்ஷ் வர்தன் "தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மை குறித்து எந்த வதந்திகளும் இருக்கக்கூடாது. அனைத்தும் மிக விரிவாகச் சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் போலியோ தடுப்பூசி மருந்து போடப்பட்டபோதும்கூட, அது குறித்து வதந்திகள் பரவின. ஆனால், போலியோ தடுப்பூசி மருந்தை மக்களுக்கு அளிக்கத் தொடங்கியதும், அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து மக்கள் உணர்ந்தனர். அதோபோலதான், கொரோனா தடுப்பூசியும் மிகவும் பாதுகாப்பானது," என்றார். இந்தியாவில் 10.2 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,000 பேர் உயிரிழந்துள்ளனர்.