புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்ற நிலையில் வாக்குச்சாவடி அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் (படம்) தெரிவித்துள்ளார்.
இதுவரை 96 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 719 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ்வர்தன், நாட்டில் முதல்கட்டமாக 10 மில்லியன் மருத்துவப் பணியாளர்கள், 20 மில்லியன் முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 30 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்றார்.
இரண்டாம் கட்டமாக 50 வயதைக் கடந்தவர்கள் உள்ளிட்ட 270 மில்லியன் முன்னுரிமை பயனாளர்களுக்கு ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி போடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது தொடர்பில் விரிவான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தடுப்பூசிகள் தொடர்பான தவறான வழிகாட்டுதல்களையும் வதந்திகளையும் யாரும் நம்பவேண்டாம் என்றும் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தினார்.
தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு அவற்றின் பாதுகாப்புத் தன்மை மற்றும் தரம் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது என்றும் இது தொடர்பான விதிமுறைகளில் மத்திய அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.

