மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையர்: இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி
புதுடெல்லி: இந்தியாவில் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசிகள் 110 விழுக்காடு அளவுக்குப் பாதுகாப்பானவை என இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுக்காக பெரும்பாலான நாடுகள் காத்திருக்கும் நிலையில் இந்தியாவில் கொவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தடுப்பூசிகளுக்கும் அவசரகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு ஆணையர் விஜி சோமானி, பாதுகாப்பு அம்சங்களில் சிறிதளவு குறைபாடு இருந்தாலும் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட மாட்டாது என்றார்.
"இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ள தடுப்பூசிகள் 110 விழுக்காடு பாதுகாப்பானவை. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு லேசான காய்ச்சல், உடல் வலி, ஒவ்வாமை போன்ற பின்விளைவுகள் இருக்கலாம்.
"ஆனால், எந்தவொரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டாலும் இத்தகைய அறிகுறிகள், பக்க விளைவுகள் தென்படுவது வழக்கம்தான்," என்றார் விஜி சோமானி.
கொவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் மூலம் இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை எனத் தெரியவந்துள்ளது என்றார்.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசிகளுக்கு விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்திருப்பது பெரிய திருப்புமுனை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
கொரோனா கிருமித்தொற்று இல்லாத நாடாக இந்தியா உருவாக உள்ளது என்றும் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

