புதுடெல்லி: மும்பைத் தாக்குதல் தொடர்பில் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜகியூர் ரகுமான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளான்.
இவன்தான் மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட வன் எனக் கருதப்படுகிறது.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜகியூர் ரகுமானை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தச் சதிச்செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஜகியூர் ரகுமான் லக்விதான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
விசாரணைக் கைதியாக பாகிஸ்தானில் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்த ஜகியூர், 2015இல் விடுதலை செய்யப்பட்டான். அவனை பயங்கரவாதி என ஐநா சபையும் அறிவித்தது.
இந்நிலையில் மருந்து நிறுவனத்தின் பெயரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட் டின் கீழ் ஜகியூர் மீண்டும் கைதாகி உள்ளான்.