புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக சிலர் பேசுவதை ஏற்க இயலாது என விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறு பேசியவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும் தாங்கள் பேசிய தகாத வார்த்தைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் அச்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், பாஜக தலைவர் ராம் மாதவ் ஆகியோர் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.
இதனால் விவசாயிகள் தரப்பு கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளது. அம்மூவருக்கும் விவசாயிகள் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
"ஒட்டுமொத்த தேசத்துக்கும் தங்கள் ரத்தத்தை வியர்வையாக மாற்றி விவசாயிகள் உணவு வழங்கி வருகிறார்கள்.
"நாட்டின் முதுகெலும்பாகவும் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாகவும் வேளாண் துறையும் விவசாயிகளும் உள்ள நிலையில் அவதூறு பேச்சுகளை ஏற்க இயலாது. சம்பந்தப்பட்டவர்கள் இதற்காகாக எங்களிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்," என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
விவசாயிகள் என்னும் பெயரில் சமூக விரோத சக்திகள், தீவிரவாதிகள், கம்யூனிஸ்ட் மற்றும் சீன ஆதரவாளர்கள் போராட்டக் களத்தில் இணைந்திருப்பதாக குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதேபோல் விவசாயிகளின் போராட்டத்தில் வெளிநாட்டு சக்திகள் புகுந்துவிட்டதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறி இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் என இப்போதும் நம்புவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று நடைபெறவுள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்கும் என நம்புவதாக விவசாயச் சங்கங்களின் பிரமுகர்கள் கூறியுள்ளனர்.

