லக்னோ: உடல் தகன நிகழ்வின் போது சுடுகாட்டு கட்டட மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக மூன்று பேரை உத்தரப் பிரதேச போலிசார் கைது செய்துள்ளனர்.காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான ஜெய்ராம் என்ற முதியவர் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் தகனம் கிராம சுடுகாட்டில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பலத்த மழை பெய்ததால் இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்கள் சுடுகாட்டு கட்டடத்தில் ஒதுங்கினர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அதன் கீழ் நின்றிருந்த பலர் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டனர். ஏற்கெனவே பலவீனமாக இருந்த மேற்கூரை மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 24 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் படையினர் துரித கதியில் செயல்பட்டதால் பலர் இடிபாடுகளில் இருந்து காப்பாற்றப்பட்டனர். மீட்புப் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஜெய்ராமின் உறவினர்கள் எனத் தெரிய வந்துள்ளது. அக்குறிப்பிட்ட கட்டடம் அண்மையில்தான் கட்டப்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இளநிலை பொறியியலாளர் உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்விபத்தில் இறந்தோரின் குடும்பத்தாருக்குப் பிரதமர் மோடியும் அதிபர் ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

