புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், துரித கதியில் கோவேக்சின் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இது நியாயமற்ற விமர்சனம் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் கிருஷ்ணா கூறியுள்ளார். தங்கள் நிறுவனம் 200 விழுக்காடு அளவுக்கு மிக நேர்மையான முறையில் தடுப்பூசிப் பரிசோதனைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, உலகளவில் ஃபைசர், மொடர்னா, ஆக்ஸ்ஃபர்ட்-ஆஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசிகள் மட்டுமே செயல்திறனை நிரூபித்துள்ள தடுப்பூசிகள் என்று இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஆதார் பூனவாலா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மற்ற தடுப்பூசிகள் பாதுகாப்பான தண்ணீரைப் போன்றவை என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், சீரம் நிறுவனத்தை நேரடியாகக் குறிப்பிடாமல் பதிலடி கொடுத்துள்ளார் டாக்டர் கிருஷ்ணா.
"சில நிறுவனங்கள் எங்களுடைய தடுப்பூசியை தண்ணீரைப் போன்றது என்று குறிப்பிட்டுள்ளன. அதை திட்டவட்டமாக மறுக்கிறேன். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆஸ்ட்ராஸெனிக்கா - ஆக்ஸ்ஃபர்ட் தடுப்பூசி பரிசோதனை தொடர்பாக இங்கிலாந்தில் இருந்து அளிக்கப்பட்ட தரவுகளை ஏற்க மறுத்துள்ளன. ஆனால் அது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.
"எனவே இவ்விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்," என்று டாக்டர் கிருஷ்ணா மேலும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இடையேயான இந்த மறைமுக மோதல் புது விவாதங்களை எழுப்பியுள்ளது.

