புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான பணிகளைத் தொடங்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டடத்துக்கான திட்ட வடிவமைப்பின், அமலாக்கத்தில் விதிமீறல்கள் இருப்பதாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சில வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அம்மனுக்களை விசாரித்த நீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கலாம் என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது. அப்பணியின்போது தூசி பரவலைத் தடுக்க உரிய கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
முன்னதாக, வழக்கு விசாரணையின் தொடக்கத்தில் புதுக் கட்டடத்துக்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டலாம் என்று அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், உடனடியாக கட்டுமானத்தைத் தொடங்கக் கூடாது என்றும் மரங்களை வெட்டக்கூடாது என்றும் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து டிசம்பர் 10ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் நேற்று இறுதித்தீர்ப்பு வெளியானது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இருவர் நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு 93 ஆண்டுகள் ஆகின்றன.

