புதுடெல்லி: பினாமி சொத்து வழக்கு தொடர்பாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. உண்மை வெற்றி பெறும் என்று ராபர்ட் வதேரா கூறியுள்ளார். பினாமி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பலமுறை கேட்ட போதும் கொரோனா விவகாரத்தால் தம்மால் விசாரணையில் இணைய முடியவில்லை என்று அவர் கூறியதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையாக ராபர்ட் வதேராவின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று அவரது வாக்குமூலத்தைப் பெற்றனர்.
லண்டனில் ராபர்ட் வதேராவுக்கு சில சொத்துகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத இந்த சொத்துகள் குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் லண்டனில் 1.9 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள சொத்து வாங்கியது தொடர்பில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக சந்தேகிக்கும் அமலாக்கத் துறையும் ராபர்ட் வதேராவை மையப்படுத்தி விசாரணை நடத்தி வருகிறது.

