மோசடியை அம்பலப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்; ஆஸ்திரேலியாவில் ஆடவர் கைது

2 mins read
6627a618-beec-4ea9-a04c-415bc32bcc71
-

தங்களைத் தொடர்புபடுத்தி இடம்பெற்ற மோசடி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் அளித்த தகவலால் மோசடிப் பேர்வழியை ஆஸ்திரேலிய போலிசார் கைது செய்தனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை நேரில் சந்தித்து, பேசி, அவர்களுடன் ஒன்றாக உணவு, பானம் அருந்தி மகிழலாம் எனக் கூறி, அந்த ஆடவர் கிட்டத்தட்ட 200 பேரிடம் தலா 500 ஆஸ்திரேலிய டாலர் வசூலித்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. அதற்காக இந்திய அணியினர் நேற்று முன்தினம் சிட்னி நகரைச் சென்றடைந்தனர்.இந்நிலையில், அங்குள்ள 'மஞ்சித்ஸ் வார்ஃப்' எனும் புகழ்பெற்ற இந்திய உணவகத்தில் இந்திய வீரர்களுடனான சந்திப்பு நிகழ்வு இம்மாதம் 5ஆம் தேதி இடம்பெறும் என அந்த மோசடிக்காரர் கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கிய அவ்வுணவகத்தின் பொது மேலாளர் தீப் குஜ்ரால், கடந்த செப்டம்பரில் அந்த ஆடவர் தம்மைத் தொடர்புகொண்டதாகக் கூறினார். "புதிதாக ஒருவர் என்னைத் தொடர்புகொள்வது வழக்கமான ஒன்றுதான். ஏனெனில், எங்களது உணவகத்தில் உணவருந்த விரும்பினால் நான்கு வாரங்கள் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டும்," என்று திரு குஜ்ரால் சொன்னதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி தெரிவித்தது.

"உணவகம் முழுவதையும் முன்பதிவு செய்ய வைப்புத்தொகையாக 75,000 ஆஸ்திரேலிய டாலர் செலுத்த வேண்டும். ஆனால், அவர் ஆயிரம் டாலர் மட்டுமே கொடுத்திருந்தார். அதன்பின் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால், அந்நிகழ்வு நடக்காது என எங்களுக்குத் தெரியும்," என்றார் திரு குஜ்ரால்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அந்த உணவகத்திற்கு அடிக்கடி செல்வர் என்பதைத் தெரிந்துகொண்டு அந்த மோசடிப் பேர்வழி பணம் பறித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள், டி20 போட்டிகளின்போது அந்த ஆடவர், சிட்னி விளையாட்டரங்கில் 'இந்திய வீரர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி' குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளார்.

"இந்திய கிரிக்கெட் அணியினர் சிட்னிக்கு வரும்போதெல்லாம் எங்கள் உணவகத்தில் இருந்துதான் அவர்களுக்கு உணவு விநியோகிக்கப்படும். சிட்னிக்கு வந்த மறுநாளே அவர்களும் எங்கள் உணவகத்திற்கு வந்துவிடுவர். விராத் கோஹ்லியும் வந்துள்ளார்.

"அவர்களிடம் என் கைபேசி எண் இருப்பதால் தங்களுக்கு வேண்டியதை அவர்களும் சொல்லிவிடுவர். அந்த வகையில், அவர்களுடன் எங்களுக்கு நல்ல உறவு இருந்து வருகிறது. உண்மையில், இப்படி ஒரு மோசடி நடப்பது குறித்து அவர்கள்தான் எனக்குத் தகவல் தந்தனர். அதன்பின் போலிசுக்கு நான் தகவல் அளிக்க, இப்போது அந்த மோசடிப் பேர்வழி பிடிபட்டுவிட்டார்," என்று திரு குஜ்ரால் விவரித்தார்.