இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் (எச்5என்8) பரவி வருவதை மத்திய மீன்வள, கால்நடை வளர்ப்பு, பால்வளத் துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் காகங்களைப் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் வலசை வந்த, ஈராயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் அந்நோயால் மாண்டுவிட்டன.
கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் ஏராளமான வாத்துப் பண்ணைகள் உள்ள நிலையில், பறவைக்காய்ச்சலால் பல்லாயிரக்கணக்கான வாத்துகள் இறந்துவிட்டன.
இதையடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நிலைமையைக் கண்காணிப்பதற்காக தலைநகர் புதுடெல்லியில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ள அமைச்சு, பறவைக் காய்ச்சலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் அன்றாடம் அந்தக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கும் எனக் கூறியது.
இதனிடையே, பறவைக் காய்ச்சல் பரவலை மாநிலப் பேரிடராகக் கேரள அரசு அறிவித்துள்ளது.
அந்நோய்த் தாக்குதல் உள்ள கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் 12,000 வாத்துகள் இறந்துவிட்டதாகவும் கிட்டத்தட்ட 40,000 பறவைகள் கொல்லப்பட இருப்பதாகவும் மாநில வன, கால்நடை வளர்ப்பு, பால்வளத் துறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்தார்.
கோட்டயம் மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காகத் தலா ஐந்து பேர் அடங்கிய எட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை போன்றவற்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில் சாலைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல, தமிழ்நாட்டில் கோழிப் பண்ணைகள் அதிகமாக இருக்கும் நாமக்கல் மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி கால்நடை வளர்ப்பு அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.
ஒரு மில்லியன் பறவைகள் இறப்பு
கடந்த பத்து நாள்களில் அரியானா மாநிலத்தின் பஞ்சகுலா மாவட்டத்தில் மட்டும் ஒரு மில்லியன் பறவைகள் இறந்துவிட்டதாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது. ஆயினும், அதற்குப் பறவைக் காய்ச்சல்தான் காரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று என்டிடிவி செய்தி கூறுகிறது.
மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சோர், இந்தூர், மால்வா ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அதன் தொடர்பில் ஆலோசிக்க முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நேற்று அவசர கூட்டத்தைக் கூட்டினார்.
இந்தூரில் நூற்றுக்கணக்கான காகங்கள் மடிந்து கிடந்த பகுதிகளில் வீடு வீடாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குக் கோழிகளைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பூங்காக்களும் வனவிலங்குச் சரணாலயங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.