கொழும்பு: இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்களை இலங்கை விரைவில் விடுவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர் தனேவை அவர் சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு உறவுகளை பலப் படுத்துவது தொடர்பாகவும், மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, கொரோனா தொற்று நோயின் தாக்கத்தை தணிக்க கடந்த பல மாதங்களாக இந்தியா அளித்த ஆதரவுக்கு இலங்கை அதிபர், இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பாக இந்திய பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக இலங்கை அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை, சுகாதாரத் துறை மற்றும் பொருளாதாரத்தில் சாதகமான நிலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் தினேஷ் குணவர்தனே கூறினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "கொரோனா தொற்றுநோய் இரு நாடுகளும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இதே போல் கொரோனா காலத்திற்கு பிந்தைய ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை பெறுவதில் இலங்கை ஆர்வமாக உள்ளது," என்றார்.
"மீன்வளம் தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டு செயற் குழு அண்மையில் கூடி ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தின்போது, நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் பட்டன. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட எங்கள் மீனவர்கள் விரைவில் விடுவிக்கப் படுவார்கள் என நம்புகிறோம். அவர்கள் விரைவில் நாடு திரும்பு வதை எதிர்பார்க்கிறோம்.
"இந்திய தொழில் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கின்றன," என்று அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.

