குமரி: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பில் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளிலும் ஒரு சொகுசு பங்களாவிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்தக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு சிற்றரசு தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் சிறையில் உள்ளார். கேரள மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் காற்றாலைகளில் முதலீடு செய்திருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்தே தேசிய புலனாய்வு முகமை சில இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.
இந்த காற்றாலைகள் சிவசங்கர், ஸ்வப்னா ஆகிய இருவரில் யாருக்கு சொந்தமானவை என்பது தெரியவில்லை என்றும், பினாமி பெயரில் வாங்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுவதாக ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.
சோதனை நடவடிக்கையின் போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

