இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று தமிழர் கட்சித் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் இல்லத்தில் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய முக்கிய தமிழர் கட்சிகளுடனும் அரசாங்கத்தை பிரதிநிதிக்கும் டக்ளஸ் தேவானந்தா, எஸ். வியா ழேந்திரன் ஆகியோருடனும் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாக பிபிசி தமிழ் குறிப்பிட்டது.
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி நிதிகளையும் திரு ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான், இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள குறைபாடுகள் தொடர்பில் இந்திய அமைச்சரிடம் பேசியதாகக் கூறினார்.
மலையக மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார் என்று ஜீவன் தொண்டமான் கூறினார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஒருவர், மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று குறிப் பிட்டுள்ளார்.
"இலங்கையில் வெகு விரைவில் இனவாதம் இல்லாத இலங்கையை கூட்டணி உருவாக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சரிடம் உறுதியளித்தோம்," என்றார்.
இராமேஸ்வரம் - மன்னார் - தூத்துக்குடி - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான கப்பல் சேவையை பரிசீலிக்க கோரிக்கை விடுத்தோம் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜா, பிபிசி தமிழிடம் பேசியபோது உள்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை இந்தியா முழுமையாக உள்வாங்கி உள்ளதாக கூறினார்.
"அத்துடன், 13வது திருத்தச் சட்டம் தற்போது கேள்விக்குறியாகியுள்ள பின்னணியில், இலங்கை தமிழ் தரப்பு எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அனைத்து தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்," என்றார் அவர்.
இதற்கிடையே தமிழர் கட்சி பிரதிநிதிகளையும் பிரமுகர்களையும் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சிஅளிக்கிறது என்று டுவிட்டர் பதிவில் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயை அவர் சந்தித்துப் பேசினார்.

