இந்தியாவில் புத்தாண்டில் கொரோனா குறைந்து வருவதாகத் தெரியவருகிறது. அதேவேளையில், பல பகுதிகளில் புதிய அச்சம் தலைதூக்கி வருகிறது. பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக அதிகாரிகள் அபாயச் சங்கு ஊதி உள்ளனர்.
ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சலால் மொத்தம் 425 பறவைகள் இறந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்தது.
மாண்ட பறவைகளில் காக்கைகளே அதிகம். மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் காக்கைகள் மடிந்துள்ளதாகவும் இமாச்சலப் பிரதேசத்தில், பல பறவை இனங்கள் பறவை காய்ச்சலால் இறந்து வருவதாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் சரணாலயப் பகுதி சுற்றுவட்டாரத்தில் 1,800 பறவைகள் இறந்துள்ளன.
கேரளாவில் கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் உள்ள ஒரு வாத்து பண்ணையில் 1,500 வாத்துகள் இறந்துவிட்டன. வேறு சில பண்ணைகளிலும் பறவைக் காய்ச்சல் தாக்கி உள்ளது.
கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களைத் தொடர்ந்து இப்போது புதுடெல்லியில் 200க்கும் மேற்பட்ட காக்கைகள் இறந்துள்ளன. அதனை அடுத்து பல பூங்காக்கள் அங்கு மூடப்பட்டன.
உடனடியாக குழு ஒன்றை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும்படி புதுடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.