மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் நாளை தொடக்கம்

மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் நாளை தொடக்கம்

2 mins read
51b6920b-7560-4aaa-ac7b-07d254dc45a5
தடுப்பூசிகளை எடுத்துச் செல்லும் ராணுவம். படம்: இபிஏ -

உலகின் மிகப்பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நாடெங்கும் 2,934 மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளில் இந்தியா முழுவதும் 300,000 சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீரம் பாரத் பயோடெக் ஆகிய மருந்து நிறுவனங்களிடமிருந்து 160 மில்லியன் மருந்துகளை அரசு வாங்கியுள்ளது. மருந்துகள் விமானம் மூலம் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய 12 தலைநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டவர்களின் விவரங்கள், தடுப்பூசி வழங்கப்பட்ட இடங்கள் போன்ற அனைத்துத் தகவல்களை வழங்கும் கோ-வின் (CO-WIN) எனும் செயலியையும் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.

முதல் கட்டத்தில் சுகாதாரத் துறையினர், முன்களப் பணியாளர் களுடன் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், உலகில் ஆக அதிகளவில் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா, 20 மில்லியன் கொரோனா கிருமி தடுப்பூசி மருந்தை அதன் அண்டை நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீஷெல்ஸ், மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கு வழங்குவதற்காக சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை வாங்கும் என்று செய்திகள் தெரிவித்தன. உலக அளவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 60 விழுக்காட்டை இந்தியா உற்பத்தி செய்கிறது. ஆனால் அமெரிக்காவிற்கு அடுத்து கிருமித்தொற்று அதிகம் பாதித்திருப்பதும் அங்குதான்.

அங்கு இன்று முன்தினம் 16,946 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 105,120,93 ஆக உயர்ந்துள்ளது. 151,727 பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்நாட்டுக்குத் தேவையைப் பூர்த்தி செய்யவும், வெளிநாடுகளுக்கு வழங்கவும் அதிவேகத்தில் தடுப்பூசி தயாரிப்பில் அந்நாடு ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கூறின.