குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து டெல்லி காவல்துறைதான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக எதிர்வரும் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தற்போது பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்து உள்ளனர்.
இந்நிலையில் டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி காவல்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், டிராக்டர் பேரணியை அனுமதிப்பது குறித்து டெல்லி போலிசார்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் பேரணியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்கலாமா என்பதையும் டெல்லி போலிசார் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
"பேரணியை அனுமதிப்பதாக இருந்தால் எத்தனை பேர் பங்கேற்கலாம், என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுப்பதும் டெல்லி காவல்துறை கையில்தான் உள்ளது.
"சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்போது காவல்துறை தனக்குள்ள அதிகாரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மத்திய அரசுக்கு நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை," என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
டெல்லி காவல்துறை மூலம் மத்திய அரசு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்தது. இதற்கிடையே டெல்லியில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக அதிகரிப்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலனில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

