இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதால் 15 பேர் நசுங்கி மாண்டனர். சூரத் நகரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொசாம்பா என்னும் கிராமத்தில் நேற்று அதிகாலை இந்த மோசமான விபத்து நிகழ்ந்தது. உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பிழைப்பு தேடி வந்த இடத்தில் உயிரைப் பறிகொடுத்தனர்.
சம்பவ இடத்தில் 12 பேர் மாண்டனர். அவர்களில் ஒரு வயது பெண் குழந்தையும் அடங்கும்.
இவ்விபத்தில் படுகாயமுற்ற ஆறு பேருக்கும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி ஓட்டுநரும் அவரது உதவியாளரும் காயமுற்றோரில் அடங்குவர். அதிகாலை வெளிச்சம் குறைவான சாலையில் கரும்புகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த டிராக்டர் ஒன்றுடன் உரசிய லாரி நிலைகுலைந்தது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலை ஓரத்தில் தாறுமாறாக ஓடியது. அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்தவர்கள் லாரியின் சக்கரங்களில் சிக்கி பலியானார்கள் என்று சூரத்தின் கம்ரேஜ் பகுதி போலிஸ் துணை கண்காணிப்பாளர் சி.எம். ஜடேஜா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார். சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் கைதாகி உள்ளார்.