கொரோனா தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்டுள்ள மருந்துப் பொருட்களால் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படக்கூடியவர்கள் அந்த ஊசியைப் போட்டுக்கொள்ளக் கூடாது என புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தங்களுக்குள்ள ஒவ்வாமை பாதிப்பு குறித்து சுகாதாரப் பணியாளர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அந்நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
"தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு முன்பாக குறிப்பிட்ட சில மருந்து, உணவு வகைகளாலும் வேறு தடுப்பூசிகள் மற்றும் கொவிஷீல்ட் தடுப்பூசியில் உள்ள மருந்துப் பொருட்களாலும் ஒருவருக்கு ஏற்கெனவே ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் அதுகுறித்து சுகாதாரப் பணியாளரிடம் கண்டிப்பாக விவரம் தெரிவிக்க வேண்டும்.
"மேலும் காய்ச்சல், ரத்தக் கோளாறு, நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஆகியவை இருந்தாலும் விவரம் தெரிவிக்க வேண்டும்," என்று இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கர்ப்பம் தரித்துள்ள பெண்களும் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் பெண்களும் தங்களின் தற்போதைய நிலை குறித்து விவரம் தெரிவிப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், வேறு கொரோனா தடுப்பூசியைப் போட்டிருந்தால் அதுகுறித்தும் சுகாதாரப் பணியாளரிடம் உரிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

