புதுடெல்லி: இந்தியாவில் தடுப்பூசி போடும் நடவடிக்கை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில் இந்தியாவின் செயல்பாட்டுக்கு அமெரிக்காவும் உலக சுகாதார நிறுவனமும் பாராட்டு தெரிவித்துள்ளன.
கடந்த ஒரு வார காலமாக இந்தியாவில் நாடு தழுவிய அளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 1.5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி போடுவதற்கான அன்றாட இலக்கை எட்ட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
தினமும் 300,000 பேருக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக அறிவித்திருந்தது மத்திய அரசு. ஆனால் கடந்த ஏழு தினங்களாக சராசரியாக 200,000 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வாய்ப்புள்ளவர்களில் மூன்றில் ஒருவர் அதற்கு முன்வரவில்லை எனத் தெரிகிறது. தடுப்பூசி குறித்த அச்சம் பலரிடம் காணப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் வரும் நாட்களில் வீண் அச்சங்கள் மறைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வருவார்கள் எனக் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு வட்டாரங்கள், இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் தரமானவை என மருத்துவ ரீதியில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கிடையே, இந்தியா உலக சமுதாயத்தின் உண்மையான நண்பன் என அமெரிக்கா பாராட்டி உள்ளது. தடுப்பூசியை பல நாடுகளுக்கு அனுப்பி வைத்து உலகளாவிய அளவில் இந்தியா உதவி செய்து வருகிறது என்று அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துறை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டுவதாகவும் அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.
பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கி உதவி செய்து வருவதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
"அனைவரும் ஒருங்கிணைந்து உதவுவது, தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம்தான் கொரோனா கிருமித்தொற்றை ஒழிக்க முடியும்," என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
பிரேசில், பங்ளாதேஷ், பக்ரைன், பூட்டான், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

