நரபலி கொடுத்தால் வலிப்புநோய் போகும் என்று சாமியார் ஒருவர் கூறியதைக் கேட்டு ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் பெற்ற மகள்களையே கொலை செய்துள்ளனர்.
சித்தூரைச் சேர்ந்த புருஷோத்தம் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராகவும் முதுநிலை பட்டதாரியான இவரது மனைவி பத்மஜா தனியார் பள்ளியில் தாளாளர் மற்றும் முதல்வராகவும் இருக்கிறார்.
27 வயதான இவரது மூத்த மகள் அலேக்கியா முதுநிலை பட்டப்படிப்பு மேற்கொண்ட நிலையில், 22வயதான இளைய மகள் திவ்யா இசைக் கல்லூரியில் பயின்று வந்தார்.
பத்மஜாவுக்கு வலிப்புநோய் உள்ள நிலையில் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
இந்நிலையில், நரபலி கொடுத்தால் வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம் என கர்நாடகாவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் இவர்களிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய புருஷோத்தம், பத்மஜா தம்பதியர் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் சிறப்புப் பூசை செய்துள்ளனர். பின்னர் ஒரு மகளை சூலாயுதத்தால் குத்திக் கொன்றுள்ளார் பத்மஜா.
பிறகு மற்றொரு மகளை உடற்பயிற்சி எடைக்கருவியைக் கொண்டு கடுமையாகத் தாக்கி உயிரைப் பறித்துள்ளார் அவர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மகள்களைக் கொன்ற பிறகு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள இத்தம்பதியர் முடிவு செய்திருந்தனர்.
நரபலி கொடுக்கப்பட்ட மகள்களும் தாங்களும் மீண்டும் உயிர்பெறுவோம் என்று நம்பியதாகவும் விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

